"எனது பதிவுகளை மக்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்" - ஈலோன் மஸ்க் சாட்சியம்!
ட்விட்டர் நிறுவனத்தை 2022 இல் வாங்குவதற்கு முன்னர், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்து சந்தை விலையை மாற்றியமைக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், பில்லியனர் ஈலோன் மஸ்க் நேற்று (4) நீதிமன்றத்தில் முன்னிலையாகிச் சாட்சியமளித்தார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில், ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் வெளியிட்ட பதிவுகள் நிறுவனத்தின் பங்கு விலையை வேண்டுமென்றே வீழ்ச்சியடையச் செய்ததாக முதலீட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் மூலம் குறைந்த விலைக்கு நிறுவனத்தை வாங்க அவர் திட்டமிட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர். இதன்போது கருத்து வெளியிட்ட ஈலோன் மஸ்க், தனது பதிவுகள் அனைத்தும் "மிகவும் நேரடியானவை" என்றும், பங்கு விலையைக் குறைக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
"நான் செய்வதை மக்கள் அதிகமாகத் துருவி ஆராய்கிறார்கள். நான் எப்போதுமே என் மனதில் தோன்றுவதைத்தான் பேசுகிறேன்" என அவர் குறிப்பிட்டார்.
"பங்குச்சந்தை என்பது ஒரு மனநலக் கோளாறு உடையவரைப் போன்றது. எனது பதிவுகள் சில நேரங்களில் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளையும் ஏற்படுத்தும்" என அவர் வாதாடினார்.
இந்த வழக்கின் முதன்மை மனுதாரர்களில் ஒருவரான பிரையன் பெல்கிரேவ், மஸ்க்கின் பதிவுகளால் தான் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
மஸ்க் ட்விட்டரை வாங்க மாட்டார் என நம்பி, தான் வைத்திருந்த ஆயிரக்கணக்கான பங்குகளை குறைந்த விலைக்கு விற்றதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
"நான் ஏமாற்றப்பட்டேன், மஸ்க் என்னை வஞ்சித்துவிட்டார்," என அவர் நீதிமன்றத்தில் உருக்கமாகத் தெரிவித்தார். வாதி தரப்பு சட்டத்தரணி ஆரன் அர்ன்சென், மஸ்க் ஒரு குத்துச்சண்டை உத்தியைப் போல எதிர்தரப்பைச் சோர்ந்து போகச் செய்து இந்த ஒப்பந்தத்தை முடித்தாரா எனக் கேட்டார்.
அதற்கு மஸ்க் "அப்படி இருக்கலாம்" எனப் பதிலளித்தார். மஸ்க்கின் நிதி ஆலோசகர் ஜாரெட் பிர்ச்சால் செவ்வாய்க்கிழமை சாட்சியமளிக்கும் போது, பெரும்பாலான கேள்விகளுக்கு "எனக்கு நினைவில்லை" என்றே பதிலளித்தார்.
மஸ்க் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் தவிர்ப்பதாகக் கூறி நீதிபதி சார்லஸ் பிரேயர் விசாரணையைச் சிறிது நேரம் நிறுத்தி மஸ்க்கிற்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த விசாரணை அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மஸ்க் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அவர் கோடிக்கணக்கான டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டியிருக்கும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்